மனைவி விஷம் தின்று தற்கொலை முயற்சி; மனம் உடைந்த கணவன் தூக்குப்போட்டு சாவு
கூடலூரில் குடும்ப தகராறில் மனைவி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றதால், மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூரில் குடும்ப தகராறில் மனைவி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றதால், மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினை
தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் சிவா அறிஞர் (வயது 34). இவரது மனைவி கவுசல்யா (25). இவர்களுக்கு ஒரு வயதில் தாரிக் என்ற மகன் உள்ளான். சிவா அறிஞர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர், தனது மனைவி, மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சிவா அறிஞர் அடிக்கடி செல்போனில் வேறொரு நபரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த இருதரப்பு பெற்றோரும், 2 பேரையும் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது குடும்ப பிரச்சினை குறித்து பேசி தீர்க்க வேண்டும் என்று கூறி சிவா அறிஞர், கவுசல்யாவை சொந்த ஊருக்கு வருமாறு அழைத்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதன்படி, கடந்த 29-ந்தேதி சிவா அறிஞர், தனது மனைவி, மகனுடன் பெங்களூருவில் இருந்து கம்பம் அருகே மஞ்சகுளம் கிராமத்தில் உள்ள கவுசல்யாவின் வீட்டிற்கு வந்தார். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கவுசல்யா நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த எறும்பு பொடியை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிவா அறிஞர், தனது மனைவியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தன்னால் தான் கவுசல்யா விஷத்தை தின்றதாக சிவா அறிஞர் புலம்பினார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, அன்றைய தினம் மாலை கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு சிவா அறிஞர் சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிவா அறிஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் விரக்தியடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.