கணவன் 2-வது திருமணம்... தாலி கட்டும் நேரத்தில் புகுந்த முதல் மனைவி ...! தெறித்து ஓடிய புதுமண ஜோடி


கணவன் 2-வது திருமணம்... தாலி கட்டும் நேரத்தில் புகுந்த முதல் மனைவி ...! தெறித்து ஓடிய புதுமண ஜோடி
x
தினத்தந்தி 29 March 2023 4:45 PM IST (Updated: 29 March 2023 4:46 PM IST)
t-max-icont-min-icon

இதுதான் சரியான தருணம் என காத்திருந்த ராம்குமார், தன் காதலியை திருமணம் செய்ய நினைத்து, மனைவிக்கே தெரியாமல் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ராம்குமார், இவரும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபீதா என்பவரும் நீண்ட வருடங்களாக காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த் நிலையில் ராம்குமாருக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அவருக்கு திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு

ராம்குமார் வேலைபார்த்து வந்த போலீஸ் நிலையத்தில், மயிலாடுதுறை மாவட்டம் திருவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவரும் காவலராக பணிக்கு சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், பின்பு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன்னை நம்பி ஊரில் காத்திருக்கும் மனிவி சபீதாவையும் கைவிட மனம் வரவில்லை. இருந்தாலும் காதலி ரம்யாவுடன் ராம்குமார் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் சபீதாவுடனான திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் சபீதா அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதுதான் சரியான தருணம் என காத்திருந்த ராம்குமார், தன் காதலியை திருமணம் செய்ய நினைத்து, மனைவிக்கே தெரியாமல் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த விவாகரத்திற்காக அவர் நீதிமன்றத்தை ஏமாற்ற தீட்டிய திட்டம் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ்வதாக தெரிவித்த ராம்குமார், கடலூரில் இருக்கும் மனைவி, மயிலாடுதுறையில் இருப்பதாக கூறி, மயிலாடுதுறை முகவரியை கொடுத்துள்ளார். நீதிமன்றமும் மயிலாடுதுறை முகவரிக்கே தொடர்ந்து சம்மன் அனுப்பிக் கொண்டே இருந்துள்ளது.

அந்த முகவரியில் தான் அவர் இல்லையே, அப்புறம் எப்படி ஆஜராக முடியும் என்ற நிலையில், சபீதா நீதிமன்றத்தில் ஆஜராகததால், நீதிமன்றமும் ராம்குமாருக்கு விவாகரத்தும் வழங்கி உள்ளது. இந்நிலையில் தன் காதலியும், பெண் காவலருமான ரம்யா உடன் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் இரண்டாவது திருமணத்திற்கு ராம்குமார் தயாராகி உள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சவீதா, சட்டென்று திருமணம் நடைபெறும் கோயிலுக்கு விரைந்த நிலையில், அங்கு சினிமாவில் காண்பது போல், சரியாக தாலி கட்டும் நேரத்தில் உள்ளே புகுந்து நிறுத்துங்க என கத்திக்கொண்டே ஓடி தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார்.

இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்க்காத ராம்குமாரும், ரம்யாவும் செய்வதறியாது நிற்க, சபீதா அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதில் திருமண ஜோடிகள் தெரித்து ஓடி போலீசிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இருவரும் போலீஸ்காரர்கள் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட்டிடம் புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் முன்பு தனக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story