பராமரிப்பின்றி காணப்படும் நீர்மின் பயிற்சி நிலையம்
அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேட்டில் நீர்மின் பயிற்சி நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேட்டில் நீர்மின் பயிற்சி நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
நீர்மின் பயிற்சி நிலையம்
அம்மாபேட்டை அருகே குதிரைக்கல்மேட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத்தின் நீர்மின் பயிற்சி நிலையம் உள்ளது. இந்த பயிற்சி மின் நிலையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மத்திய பண்டகசாலை, பராமரிப்பு அலுவலகம், சீனியர் என்ஜினியர்கள், உதவி என்ஜினியர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை உள்ளது.
இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தற்போது 20 குடியிருப்புகளில் மட்டுமே மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். அனைத்து வீடுகளும் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.
ஜன்னல் மற்றும் கதவுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், சுவற்றின் விரிசலில் செடிகள் முளைத்தும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் வீடுகள் உள்ளன.
புதர் மண்டி...
மேலும் இங்குள்ள காலியான குடியிருப்புகளில் சில சமூக விரோதிகள் மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி எச்சில் துப்புவதுமாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் மின் நிலையங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த வளாகத்தில் பயிற்சி அரங்கம் மற்றும் அவர்களுக்கான தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. உரிய பராமரிப்பு இல்லாததால் வளாகத்தை சுற்றியும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பயிற்சிக்கு வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோரிக்கை
இதேபோல் இங்குள்ள கட்டுமான பணிகளுக்கான தளவாடங்கள் வைக்கும் கிடங்கை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் தேள், பாம்பு உள்ளிட்ட ஏராளமான விஷ ஜந்துகள் சுற்றித் திரிகின்றன. எனவே இந்த நீர்மின் பயிற்சி வளாகத்தில் உள்ள புதர்களை அழித்து சீரமைக்கவேண்டும்.
அதேபோல் மது அருந்துபவர்களை தடுக்கவும் மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.