ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது


ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
x

புதுச்சேரியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி நெல்லை அருகே கவிழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

திருநெல்வேலி

புதுச்சேரியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ைஹட்ரஜன் வாயு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி நெல்லை அருகே கவிழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

சிலிண்டர் லாரி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அணு உலைக்கு தேவையான ைஹட்ரஜன் வாயு சிலிண்டர்கள் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்படும்.

வழக்கம்போல் ஒரு லாரியில் தலா 43 கிலோ எடை கொண்ட 180 நைட்ரஜன் வாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கூடங்குளம் நோக்கி வந்தது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜன் என்பவர் ஓட்டினார்.

கவிழ்ந்தது

நேற்று மாலை இந்த லாரி நெல்லை ரெட்டியார்பட்டி 4 வழி மலைப்பாதையை கடந்து கூடங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

நெல்லை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி அருகே பாலத்தில் ஏறுவதற்கு முன்பாக திடீரென்று லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் சாலை முழுவதும் உருண்டு சிதறி கிடந்தன.

போக்குவரத்து மாற்றம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் முதலில் சிலிண்டர்கள் மீது தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர். இவ்வாறு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிலிண்டர்கள் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தனர்.

இதையொட்டி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலத்தின் பக்கவாட்டு சர்வீஸ் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

கருவி மூலம் ஆய்வு

இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தீயணைப்பு அதிகாரி அனுஜ் தலைமையில் குழுவினர் அங்கு வந்தனர். மீட்பு பணி நடைபெற்றது.

லாரியில் இருந்து கீழே விழுந்து சிதறி கிடந்த சிலிண்டர்களில் இருந்து வாயு வெளியேறுகிறதா? என்பதை சிறப்பு கருவி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது சிலிண்டர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாற்று லாரி மூலம் அந்த சிலிண்டர்களை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story