'நான் முதல்வன்' உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்தரங்கம்


நான் முதல்வன் உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

தமிழக முதல்-அமைச்சரின் 'நான் முதல்வன்' திட்டத்தின்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி தேடும் மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' உயர்வுக்கு படி வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில்,'கல்வியின் சிறப்பையும், உயர் கல்வியின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்களை அனைத்து நிலைகளிலும் முதல்வனாக எண்ணிக் கொண்டு செயல்பட்டால் முதல்வனாக திகழ முடியும். அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம்' என குறிப்பிட்டார்.

முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோவை பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறை ஆய்வாளர் சத்யா, உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பற்றி கருத்துரை வழங்கினார்.

விழிப்புணர்வு அரங்குகள்

தூத்துக்குடி சமூகநல அலுவலர் ஷெலின், எட்டயபுரம் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணா, திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா ஆகியோர் அரசு திட்டங்களை பற்றி எடுத்துரைத்தனர். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது நன்றி கூறினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் கதிரேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கருத்தரங்கில் திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் மற்றும் வருவாய் துறை, கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில்நுட்ப கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, மர்காசியஸ் கல்லூரி, டான் பாஸ்கோ கல்லூரி, காமராஜ் பெண்கள் கல்லூரி, சாத்தான்குளம் அரசு கலைக்கல்லூரி, பள்ளிக் கல்வித்துறை, வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை, திறன் பயிற்சி மையம், இ-சேவை மையம், வங்கி கடன் வழங்கும் துறைகள் சார்பில் விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று பயன் பெற்றனர்.


Next Story