மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல வந்ததாக நினைத்து அடித்து கொன்றேன்
முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளை ஏற்றி என்னை கொல்ல வந்ததாக நினைத்து அடித்து கொன்றேன் என்று பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பா.ம.க. பிரமுகர் கொலை
வேலூரை அடுத்த பெரிய சித்தேரியை சேர்ந்தவர் மோகன் மகன் பிரகாஷ் (வயது 26), கட்டிட மேஸ்திரி. அந்த பகுதியின் பா.ம.க. மண்டல செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள சாலை வழியாக சித்தேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் கடை வைத்திருக்கும் பெரிய சித்தேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார். பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று ராமகிருஷ்ணன் மீது மோதுவது போன்று நிறுத்தினார்.
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன் கட்டையால் பிரகாஷ் தலையில் அடித்தார். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறைவன்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை (52) கைது செய்து விசாரித்தனர்.
கவுன்சிலர் தேர்தலில் மோதல்
அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் விருப்ப மனு அளித்தனர். கட்சி மேலிடம் பிரகாசை கவுன்சிலர் வேட்பாளராக அறிவித்தது. அதனால் அதிருப்தி அடைந்த ராமகிருஷ்ணன் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டார். இருவரும் கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தனர். கவுன்சிலர் தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஊரில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவை சித்தேரியில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மோட்டார் சைக்கிளை மோதி...
பிரகாஷ் முன்விரோதம் காரணமாக பார்க்கும்போதெல்லாம் ராமகிருஷ்ணனுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பிரகாஷ் மோட்டார் சைக்கிளால் மோதி தன்னை கொல்ல வந்ததாக நினைத்து கட்டையால் அவரை தாக்கியதாகவும், கொலை செய்யும் நோக்கத்தில் இல்லாமல் எச்சரிக்கை செய்யவே அடித்தபோது எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.