''ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன்; ரூ.10 ஆயிரம் அபராதம் போடுவதா?'' இளம்பெண் போலீசாரிடம் வாக்குவாதம்


ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன்; ரூ.10 ஆயிரம் அபராதம் போடுவதா? இளம்பெண் போலீசாரிடம் வாக்குவாதம்
x

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி வந்த பெண், ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாது என்று போலீசாரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘‘ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன், அதற்கு இவ்வளவு அபராதம் போடுவதா?’’ என்றும் அந்த பெண் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து, மது வியாபாரம் செய்கிறது. அதே அரசு மது அருந்திவிட்டு, வாகனங்களை ஓட்டி செல்பவர்களை பிடித்து, போலீசார் மூலம் ரூ.10 ஆயிரம் அபராதமும் வசூலிக்கிறது. இது நியாயமா? என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் உள்ளது.

போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் மாட்டி, தங்களது பணக்கஷ்டத்தை போலீசாரிடம் கொட்டி, சண்டை போடுவது சென்னையில் அன்றாடம் வாடிக்கையாக நடக்கிறது.

வாக்குவாதம் செய்த பெண்

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு இதுபோல் ஒரு சம்பவம். போதையில் ஸ்கூட்டி ஓட்டி வந்த ஒரு பெண்ணை போலீசார் மடக்கி பிடித்து, ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர். ரூ.10 ஆயிரம் அபராதம் போட்டு, உரிய செல்லானும் கொடுத்தனர். அந்த பெண் ''நான் ஓசியில் குடித்து விட்டு வந்துள்ளேன். இதற்கு ரூ.10 ஆயிரம் என்னால் கட்ட முடியாது, அவ்வளவு பணம் என்னிடம் இப்போது இல்லை'', என்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நான் தினமும் இந்த வழியாகத்தான் குடித்துவிட்டு, ஸ்கூட்டியில் செல்கிறேன். இன்று மாட்டிக்கொண்டேன் என்றும் புலம்பினார்.

இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, அபராத தொகை இப்போது கட்ட வேண்டியது இல்லை, என்று செல்லானை கையில் கொடுத்து, வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

பரோட்டோ வாங்க சென்றவர்

புத்தாண்டு தினத்தன்று தனது குழந்தைகள் பரோட்டா கேட்டதால், போதையில் இருந்த தந்தை ஒருவர், அருகில் உள்ள ஓட்டலுக்கு பரோட்டோ வாங்கமோட்டார் சைக்கிளில் சென்றார். போலீசில் மாட்டினார். கூலி தொழிலாளியான அவர் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாமல் தவித்த நிலையில் உள்ளார். பொதுமக்களின் இந்த கஷ்டம் நியாயமாக பட்டாலும், போலீசார் இதற்கு சொல்லும் விளக்கமும் நியாயமானதாக உள்ளது.

சட்டப்படிதான் நடக்கிறது

ஒரு உயர் போலீஸ் அதிகாரி இதற்கு அளித்த நியாயமான விளக்கம். அரசு மதுக்கடைகள் நடத்துவது புதிது அல்ல. ஆனால் போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பது, நாடு முழுவதும் உள்ள புதிய சட்டம். அரசு மதுக்கடையில் மது அருந்தியதால், போதையில் வாகனம் ஓட்டலாம், என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஓசியில் மது அருந்திவிட்டு வந்தால், அபராதம் கிடையாது என்பதும் சட்டத்தில் கிடையாது.

யாராக இருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும், என்று சட்டம் சொல்கிறது. போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களால்தான் அதிக அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. உயிப்பலியை தடுக்க இதுபோன்ற கடுமையான சட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், இந்த கசப்பான மருந்தையும் அருந்தியே ஆக வேண்டும் என்று அந்த அதிகாரி விளக்கம் அளித்தார். காலப்போக்கில் இது பழக்கமாகிவிடும் என்றும், பொதுமக்களும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டமாட்டார்கள் என்பதும் அந்த அதிகாரியின் வாதம்.


Next Story