எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது
பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று உள்ளேன். எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி;
பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று உள்ளேன். எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு எனக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
பேட்டி
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல் துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது. காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.
தவறான முன்னுதாரணம்
விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம்.ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
விரக்தியில் பேசுகிறார்
டெல்டா பகுதி பாரம்பரிய அரசியல் தலைவர்கள் வாழ்ந்த பகுதியாகும். இங்கு கண்ணியத்துடன் தான் விமர்சனங்களும் வைக்கப்படும். ஆனால் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த சில தினங்களாக அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்.வைத்திலிங்கத்துடன் உடன் இருந்தவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார்கள். அதனால் விரக்தியில் வைத்திலிங்கம் ஏதேதோ பேசுகிறார்.எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சியையும், கட்சியையும் திறம்பட கொண்டு சென்றதால்தான் இன்று அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அப்படி ஒரு தலைவரை விமர்சிக்க வைத்திலிங்கத்திற்கு என்ன தகுதி இருக்கிறது.
தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றேன்
தஞ்சாவூர், ஒரத்தநாட்டுக்கு ஏதேதோ திட்டங்கள் செய்தேன் என்று வைத்திலிங்கம் கூறுகிறார். அப்படி செய்திருந்தால் 2016 தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தார். நான் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன். எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.2016 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சசிகலா குடும்பம் தான் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் வைத்திலிங்கம். அதையெல்லாம் மறந்து விட்டு தற்போது சசிகலா, தினகரன் ஆகியோருடன் ஒன்றாகி விட்டதாக வைத்திலிங்கம் கூறுகிறார்.அரசியலில் செல்லாக்காசானவர்கள் ஒன்று சேர்ந்தாலும் செல்லாக்காசுதான். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.