நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்..? - நிர்மலா சீதாராமன் விளக்கம்


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்..? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 March 2024 11:10 PM GMT (Updated: 27 March 2024 11:11 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜனதா களம் இறக்கி உள்ளது.

அந்தவகையில், மாநிலங்களவை எம்.பி.க்களான மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, எல்.முருகன், ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

டெல்லியில் நேற்று நடந்த ஒரு ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், "பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார். நான் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் அதுபற்றி யோசித்தேன். பிறகு திரும்பிப்போய் சொன்னேன்.

''தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆந்திராவா, தமிழ்நாடா என்பதிலும் எனக்கு பிரச்சினை இருக்கிறது. மேலும், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றியும் கேள்விகள் எழும். நீங்கள் அந்த சாதியா? அந்த மதமா? இந்த ஊரா? இப்படி கேள்விகள் வரும்.

எனவே, என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது'' என்று சொல்லி விட்டேன். அவர்கள் என் வாதத்தை ஏற்றுக்கொண்டனர். ஆகவே, நான் போட்டியிடவில்லை. அவர்களுக்கு என் நன்றி" என்று அவர் கூறினார்.

''நாட்டின் நிதி மந்திரியிடம் கூட தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா?'' என்று பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் எனக்கு சொந்தமானது அல்ல. எனது சம்பளம், எனது வருமானம், எனது சேமிப்பு ஆகியவை மட்டுமே எனக்கு சொந்தம்" என்று அவர் கூறினார்.


Next Story