44 ஆண்டுகள் போராடி இருக்கிறேன்
தமிழ்நாட்டில் 44 ஆண்டுகள் போராடி இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
வாலாஜாவில் நடந்த பா.ம.க. நிர்வாகி எம்.கே.முரளி இல்ல திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசயதாவது:-
தமிழ்மொழி
இந்த திருமணத்தின் சிறப்பு என்னவென்றால், மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வது தான். மற்ற திருமணங்களில் இதுபோல் கிடையாது. மணமக்களுக்கு தமிழ் தெரியுமோ? தெரியாதோ? என நினைத்தேன். ஆனால் நன்றாக படித்தார்கள். நம்முடைய தாய் நமக்கு முதலில் சொல்லித் தரும் மொழி தமிழ் தான்.
தமிழில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் அவரவர் தாய் மொழியை தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜெர்மனி நாட்டில் அவர்களது மொழியில் தான் தண்ணீர் கூட கேட்டு வாங்க முடியும். பிரான்ஸ் நாட்டில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் அவர்களது மொழியில் கூறினால்தான் வாங்க முடியும். ஆனால் இங்கு அப்படி இல்லை.
தமிழை வளர்த்து வாழ்வோம்
நிலாவை காட்டி சோறு ஊட்டினார்கள். அதன் பிறகு சாதம் என்றார்கள். இப்போது ரைஸ், ஒயிட் ரைஸ் என்கிறார்கள். ரைஸ் என்றால் அரிசி என்று அர்த்தம். இதில் எங்கே இருக்கிறது தமிழ். கிராமங்களில் படிக்காத பெண்கள் அவர்களது பெண்கள் முழுகாமல் இருப்பதை கூட தற்போது கன்சிவ் ஆக இருப்பதாக கூறுகிறார்கள்.
நம்மைப் போன்று இப்போது தமிழ் முறைப்படி நாடார் சமுதாய மக்களும் திருமணம் செய்கிறார்கள். எல்லோரும் அய்யர் வைத்து தாலி எடுத்துக் கொடுக்காமல், பெற்றோர்களால் தாலி எடுத்துக் கொடுக்கிறார்களே என்று ஆச்சரியப்படுகிறார்கள். தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம். தமிழை வளர்த்து நாம் வாழ்வோம். ஆங்கிலம் பேச வேண்டாம் என சொல்லவில்லை.
பெண் தெய்வம்
எம்.கே.முரளி அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை உண்மையான தொண்டனாக இருந்து வருகிறார். ஒரு தலைவனாக உயர்ந்து நிற்கிறார். இங்கு வருவதற்கு ஆளாளுக்கு ஒரு வழி சொன்னார்கள். 2 மணி நேரத்தில் வரும் தூரம் ஐந்தரை மணி நேரம் ஆகிவிட்டது. நான் நினைத்துக் கொண்டேன் நாமும் சரியாக வழி காட்டவில்லையோ? சரியாக வழிகாட்டி இருந்தால் 34 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்திருக்கலாமே? என்று.
19 வயதிற்கு கீழே உள்ள பெண்களை பெண் என சொல்லக்கூடாது. பெண் தெய்வம் என சொல்ல வேண்டும். இந்த மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மகள் பூர்விகா என்ற 10 வயது பெண் தெய்வம் ஒருவரிடம், உங்கள் அப்பா நிறைய பணம் வைத்திருக்கிறாரா? என்னிடம் பணமே இல்லை என்றேன். அதற்கு அந்த குழந்தை உங்களிடம் மக்கள் இருக்கிறார்களே என்றார். அந்தக் குழந்தைக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு தெரிகிறது.
44 ஆண்டுகள்
இந்த மாவட்டத்தில் போராட்டம் அதிகம் செய்துள்ளோம். வாணியம்பாடியில் இருந்து வாலாஜா வரை பாலாற்றை காப்பாற்ற சைக்கிள் பயணமாக போராடினேன். 40 கிலோமீட்டர் சென்றதும் கிராமங்களில் தரையில் அமர்ந்து மக்களோடு மக்களாக சாப்பிட்டு இருக்கிறேன். இந்தியாவில் 54 மாவட்டங்கள் கருப்பு மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த மாவட்டமும் ஒன்று. டாக்டர் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தமிழ்நாட்டில் 75 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று 44 வருடம் போராடி இருக்கிறேன். 5 நாட்கள் வேலை செய்து, 2 நாட்கள் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சுற்றுவேன். பா.ம.க. ஏழை கட்சி தான். ஆனால் முரளி, இளவழகன் போன்று நவரத்தினங்கள் கிடைக்கிறது. 44 ஆண்டுகள் போராடியிருக்கிறேன். அதனால்தான் இந்த கட்சி உயிரோட்டமாக உள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து கந்திலி வரை பெரிய மாவட்டமாக இருந்தது. மூன்றாக பிரிக்க சொல்லி 25 ஆண்டுகள் போராட்டம் நடத்தினோம். எனது தலைமையில் வேலூரில் போராடினோம். கடந்த ஆட்சி காலத்தில், நான் சொன்னதை வைத்து இதனை பிரித்தார்கள். நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. சிறியது தான் அழகு. சிறியதாக இருந்தால் தான் வளர்ச்சி திட்டங்கள் அதிகம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.