'சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை' ரூபி மனோகரன் பேட்டி


சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை ரூபி மனோகரன் பேட்டி
x

சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குள் நடைபெற்ற அடிதடி மோதலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரூபி மனோகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நான் கடந்த 3 நாட்களாக சென்னையில்தான் இருக்கிறேன். நேற்று முன்தினம் சத்திய மூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக என் பெயரை வேண்டும் என்றே இழுக்கிறார்கள். என் தொகுதிக்கு உட்பட்ட வட்டாரங்களில் வட்டார தலைவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமித்தார்கள்.

அந்த பகுதியில் கட்சிக்காக இவர்களை விட நீண்ட நாட்களாக உழைத்து வரும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், சம்பந்தம் இல்லாமல் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தது உள்ளூர் கட்சியினருக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர்கள் திரண்டு வந்து மாநில தலைவரிடம் முறையிடுவதற்காக சத்தியமூர்த்தி பவன் வந்துள்ளனர். ஒரு குடும்பத்து பிள்ளைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் நிவாரணம் தேடி பெற்றோர்களைதான் அணுகுவார்கள். அதுபோலதான், நாங்குநேரி தொகுதியில் இருந்து வந்த கட்சி தொண்டர்கள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் முறையிடுவதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று இருக்கிறார்கள்.

எனக்கு சம்பந்தம் இல்லை

ஆனால், அவர்களை சம்பந்தம் இல்லாதவர்களை தாக்குவது போல விரட்டி அடித்து இருக்கிறார்கள். கண்மூடித்தனமாக தாக்கியதில் 4 பேரின் மண்டை உடைந்து உள்ளது. இவர்கள் அனைவரும் உண்மையான காங்கிரஸ்காரர்கள். அவர்களை அடித்து துரத்தியது அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்ற ரீதியில் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிரச்சினைக்கு காரணம் நான்தான் என்று திட்டமிட்டு என் மீது பழி சுமத்தப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அடிதடி மோதலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்த உண்மை நிலவரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவிடம் எடுத்து சொல்லி புகார் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story