அண்ணன் மகளை தரக்குறைவாக பேசியதால் கொன்றேன்
திருவட்டார் அருேக வடமாநில தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன் மகளை தரக்குறைவாக பேசியதால் கொன்றதாக கைதான சக தொழிலாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருவட்டார்:
திருவட்டார் அருேக வடமாநில தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன் மகளை தரக்குறைவாக பேசியதால் கொன்றதாக கைதான சக தொழிலாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி படுகொலை
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம் திலபா பஜார் பகுதியைச்சேர்ந்தவர் சோம்போ விஸ்வாஸ் (வயது30), தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அனில் பர்மன் (22) என்பவரும் திருவட்டார் அருகே உள்ள கீழ்சித்திரங்கோட்டில் ஒரு அலங்கார தரைகற்கள் (இண்டர்லாக்) தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இதற்காக இருவரும் தொழிற்சாலை அருகே ஒரு அறையில் தங்கியிருந்தனர்.
கடந்த 21-ந் தேதி இரவு இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சோம்போ விஸ்வாசை, அனில்பர்மன் கத்தியால் குத்தியும் கம்பியால் அடித்தும் கொலை செய்தார். இதுதொடர்பாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அனில் பர்மனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சொந்த ஊரில் வேலை இல்லை
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 3 சகோதரிகளும், ஒரு அண்ணனும் உண்டு. சொந்த ஊரில் வேலை இல்லாததால் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உறவினர் மூலம் சித்திரங்கோட்டில் உள்ள இண்டர்லாக் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்ேதன். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு எனது பக்கத்து வீட்டை சேர்ந்த பின்வாஸ் மகன் சோம்போ விஸ்வாஸ் (30) இங்கு வேலைக்கு சேர்ந்தார். நாங்கள் இருவரும் தொழிற்சாலை அருகிலேயே அறையில் தங்கியிருந்தோம்.
எனது அண்ணனுக்கு 19 வயதில் ஒரு மகள் உண்டு. 5 மாதங்களுக்கு முன்பு அவளுக்கு திருமணம் நடந்தது. அப்போது, என்னுடன் தங்கியிருந்த சோம்போ விஸ்வாஸ், அண்ணன் மகளை அவனுக்கு ஏன் திருமணம் செய்து கொடுக்கவில்லை எனக்கேட்டு தரக்குறைவாக பேசினான். இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மது போதையில் தகராறு
கடந்த 21-ந் தேதி இரவு நாங்களும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நண்பரும் சேர்ந்து மது அருந்தி விட்டு அவரவர் அறைக்குச்சென்றோம். அப்போது அறையில் வைத்து சோம்போ விஸ்வாஸ், எனது அண்ணன் மகளை ஏன் அவனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை என்று மீண்டும் கூறி தகராறு செய்தான்.
நான் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து தரக்குறைவாக பேசிக்கொண்டிருந்தான். இதனால், இவனை விட்டு வைக்கக்கூடாது என்று நினைத்து கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் (ஜாக்கி லிவர்) அடித்தும் கொலை செய்தேன். இதை தடுக்க முயன்ற தொழிற்சாலை உரிமையாளர் சோபிதராஜ் மற்றும் சக தொழிலாளர்கள் மீது கத்தியை வீசி விரட்டியடித்தேன்.
ஊருக்கு செல்ல முயற்சி
பின்னர் இரும்பு கம்பியை தொழிற்சாலையின் பின்புறம் உள்ள புதரில் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினேன். வலியாற்றுமுகம் பகுதிக்கு வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ் ஏற நின்ற போது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.