நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்;உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு உதயநிதி கேள்வி
நான் மக்களை சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன்.. உங்கள் மகன் ஜெய் ஷா, பிசிசிஐ அமைப்பிற்கு எப்படி தலைவரானார் என்று அமித்ஷாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நேற்று ராமேசுவரத்துக்கு வந்த அமித்ஷா என்னைப் பற்றி பேசி இருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டலினின் லட்சியமாம். நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன்.
நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி அவருக்கு எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்பினார்.