'தாய்மாமனை கல்லால் அடித்து கொலை செய்தேன்'
மது குடிப்பதற்கு பணம் தராததால் தாய்மாமனை கல்லால் அடித்து கொன்றேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 60). கட்டிட தொழிலாளி. இவரது தங்கை செல்வி மகன் ஜெயக்குமார் (24). இவர் மரியதாஸ் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி இரவு வீட்டில் மரியதாஸ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மரியதாசை அவருடைய மருமகன் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயோ குப்தா உத்தரவின்பேரில், உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயக்குமாரை ேதடி வந்தனர்.
இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தப்பி ஓடிய ஜெயக்குமார் இருக்குமிடத்தை அவருடைய செல்போன் சிக்னல் மூலம் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஜெயக்குமார், திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் தாய்மாமன் மரியதாசிடம் மது குடிக்க ரூ.200 கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கல்லால் அடித்து கொலை செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.