''காரில் இருந்து அப்பா தூக்கி வெளியே வீசியதால் உயிர் தப்பினேன்''காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் பரபரப்பு தகவல்


காரில் இருந்து அப்பா தூக்கி வெளியே வீசியதால் உயிர் தப்பினேன்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

விபத்தின் போது காரில் இருந்து அப்பா தூக்கி வெளியே வீசியதால் உயிர் தப்பியதாக காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் பரபரப்பான தகவலை தெரிவித்தான்.

தேனி

விபத்து நடந்தது எப்படி?

குமுளி மலைப்பாதையில் பள்ளத்தில் கார் பாய்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 8 பேர் பலியானார்கள். அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன் ஹரிஹரன், அவருடைய தந்தை ராஜா ஆகியோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்றே போலீசாரால் சரியாக கணிக்க முடியாததாக உள்ளது.

சாலையோர பள்ளத்தில் இருந்த மரத்தின் கிளையில் கார் மோதியதற்கான தடயங்கள் உள்ளன. அந்த மரக்கிளையும் சேதம் அடைந்துள்ளது. சாலையோரம் உயரம் குறைவாக இருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் அந்தரத்தில் பறந்து சென்று, மரக்கிளையில் மோதி, பள்ளத்தில் விழுந்ததாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் சிறுவனை தவிர அனைவரும் காருக்குள் இருந்து மீட்கப்பட்டனர். சிறுவன் மட்டும் சாலையோரம் காயங்களுடன் கிடந்த நிலையில் மீட்கப்பட்டான். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடமும், தனது தாயிடமும் சிறுவன் விபத்தின்போது நடந்த நிகழ்வுகளை அழுகையோடு விவரித்தான்.

அப்பா தூக்கி வீசினார்

சிறுவன் கூறிய தகவல் வருமாறு:-

காரில் வந்து கொண்டு இருந்தோம். நான் முன் இருக்கையில் அப்பாவின் மடியில் அமர்ந்து இருந்தேன். தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடீரென அப்பா தூக்கி கார் கதவின் வழியாக வெளியே வீசினார். கண் இமைக்கும் நேரத்தில் கார் பள்ளத்தில் தொப்பென்று விழுந்தது. அப்பா என்னை வெளியே தூக்கி வீசியதால் உயிர் தப்பினேன். இல்லை என்றால் நானும் காருக்குள் சிக்கி இருப்பேன்.

இவ்வாறு சிறுவன் கூறியுள்ளான்.

சிறுவனும், அவனது தந்தை ராஜாவும் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரே வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளையில் ரத்தக்குழாய் உடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது.


Related Tags :
Next Story