நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்


நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்
x

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்

நாகப்பட்டினம்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

நாகை அவுரி திடலில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாகை, கலைஞர் போட்டியிட விரும்பிய தொகுதி. விவசாயிகள், மீனவர்கள் நிரம்பிய நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. இந்த கூட்டத்தை நாகையில் நடத்துவதில் பெருமைப்படுகிறேன். தி.மு.க. இளைஞரணியை பொறுத்தவரை உழைத்தால் யார் வேண்டுமானாலும் உயரலாம்.

மாணவர்கள் துணை நிற்பேன்

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியாக இருந்தபோதும் போராட்டம் நடத்தினோம். தற்போதும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை தாண்டி உண்மையாக போராடுகிறோம்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் மாணவர்களுக்கு என்றும் துணை நிற்பேன். பதவி பொறுப்புக்காக தொடங்கப்பட்டது அல்ல, தி.மு.க. மாநில சுயாட்சிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் தான் தொடங்கப்பட்டது.

சவால் விட்டேன்

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் ஒரு சவால் விட்டேன். தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் டெல்லிக்கு போய் போராட்டம் நடத்துவோம். அப்படி நீட் தேர்வு ரத்தாகி விட்டால் அந்தப்பெருமை முழுக்க, முழுக்க உங்களுக்குத்தான் என்று சொல்லி இருந்தேன். அதற்கு தற்போது வரை பதில் இல்லை.

வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடக்கும் தி.மு.க. இளைஞரணி மாநாடு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் மாநாட்டின் நிதியாக ரூ.15 லட்சத்தை அமைச்சர் உதயநிதியிடம், மாவட்ட செயலாளர் கவுதமன் வழங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாட்கோ தலைவர் மதிவாணன், நகராட்சி தலைவர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், மகாகுமார், செங்குட்டுவன், ஆனந்த் உள்பட இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story