'சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்' -அன்புமணி ராமதாஸ்


சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன் -அன்புமணி ராமதாஸ்
x

‘சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்’ என்று மக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2-வது நாளாக அரியலூர் நகர பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி, நடைபயணத்தை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொடங்கினார்.

அரியலூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

நீ்ர்நிலை சோழர்கள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து, வரம். இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளை உருவாக்கி மாவட்டத்தையே செழிக்க வைத்திருந்தார்கள். இன்றைக்கு அரியலூர் என்று கூறினாலே வறட்சி, விவசாயம் இல்லாத, குடிநீர் இல்லாத மாவட்டம் என்ற பெயரும் உண்டு. இதனை மாற்றி அமைக்க, அரியலூர் சோழர் பாசன திட்டத்தினை நிறைவேற்றினால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செழிப்பை பெரும்.

வேளாண் சார்ந்த மண், குடிநீர், வேலைவாய்ப்புக்கு பிரச்சினை இல்லாத மகிழ்ச்சியான மண்ணாக மாறும். இது நமது கடமை. எனது பயணத்தின் நோக்கம் உங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள். காலங்காலமாக நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம், அதிகாரம், மதுவை வைத்து நம் வாக்குகளை பெரும் கட்சிகளிடையே நாம் ஏமாறக்கூடாது.

மீட்டெடுக்க வேண்டும்

இந்த திட்டம் வேண்டும் என கட்சி, சாதி, மதத்தை பார்க்காமல் நீங்கள் அரசிடம் உங்களின் முன்னேற்றம், வாழ்வாதாரத்திற்கு, விவசாயத்திற்கு, வேலைவாய்ப்புக்கு கேளுங்கள். அனைவரும் ஒன்றாக திரளுங்கள். அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுசேர்ந்தால் அரசு கட்டாயம் இந்த திட்டத்தை நிறைவேற்றும். நமக்கு மன்னர்கள் கொடுத்த சொத்து, வரம் மிகப்பெரிய ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள். அதனை மீட்டெடுக்க வேண்டும்.

செம்பியன் மாதேவி ஏரி 1500 ஏக்கர், கரைவேட்டி ஏரி பறவைகள் சரணாலயம் 1200 ஏக்கர். பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை ராஜேந்திர சோழர் அமைத்தார். இதனை மீட்டெடுக்க வேண்டும். பொன்னேரியில் பொன்னாறில் நீர் வரத்து இல்லை. அனைத்தையும் மீட்க வேண்டும். சோழர்களின் காலத்திற்கு செல்ல நாம் அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதுவே சோழர் பாசன திட்டம்.

நீங்கள் இதற்காக குரல் கொடுத்து, ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் இங்கு முதற்கட்டமாக வந்துள்ளேன். நான் வந்து பேசிவிட்டு செல்பவன் இல்லை. அரசு திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கி அதனை செயல்படுத்த வைப்பேன். நமது மண்ணில் நாம் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்.

போராட்டத்திற்கு தயாராக இருக்கிறார்கள். அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுங்கள். நாங்கள் இப்போது பணிவுடன் பாசத்துடன் உரிமையாக கேட்கிறோம். வீணாகும் தண்ணீரை எங்களின் மாவட்டத்திற்கு தாருங்கள். நாங்களும் வாழ வேண்டும். அதற்கே நான் இங்கு வந்துள்ளேன். தமிழக அரசே சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்று.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story