"சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன்" - ஓபிஎஸ் அதிரடி பேட்டி
சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன். உதயகுமாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சசிகலாவை விரைவில் சந்திப்பேன். தன்னை பற்றி விமர்சித்த ஆர்பி உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றார். இதனிடையே, நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருந்தார்.
அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். அதிமுகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதனால் இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசம் சென்றது, ஆனாலும், இது நிரந்தரம் இல்லை, நாங்கள் தான் உண்மையான அதிமுக, தர்மம் வெல்லும் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக வழக்கும் நீதிமன்றங்களில் உள்ளது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ்.
அப்போது பேசிய அவர், எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலா வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.