காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன்ஈரோட்டில் மக்கள் ராஜன் பேட்டி
மக்கள் ராஜன்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, எப்போதுமே எதையும் முழுதாக புரிந்து கொள்ளாமல் அரைகுறைவாகத்தான் புரிந்து கொள்வார். அதைபோல் தான், அண்ணாமலை பேட்டியில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், அவர் சென்னையில் உள்ள அனைத்து கட்சியின் தலைவர்களிடம் ஆதரவு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், ஆனால், ஈரோட்டில் ஒரு மாவட்ட தலைவரின் ஆதரவு அவருக்கு இல்லை எனவும், அந்த மாவட்ட தலைவர் மன வருத்தத்தில் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
நான் காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். இதன் காரணமாக ஜனநாயக முறைப்படி தான் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். இந்த இடைத்தேர்தலில் 'கை' சின்னம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இதற்கு எனது ஒத்துழைப்பும், எனது தெற்கு மாவட்ட ஒத்துழைப்பும் இருக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அழவில்லை. தாய், தந்தை என்னுடன் இல்லாத இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி தான் என்னுடைய தாய், தந்தை என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். அதனால் தான் அழுதேனே தவிர வேறு காரணம் கிடையாது. அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.