ஏழை, எளியோருக்கு மருத்துவ சேவை செய்வேன்-மருத்துவ தரவரிசை பட்டியலில் பழங்குடியினர் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சந்திரன் பேட்டி
ஏழை, எளியோருக்கு மருத்துவ சேவை செய்வேன் என்று `நீட்' தேர்வில் பழங்குடியினருக்கான பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சந்திரன் தெரிவித்தார்.
ஏழை, எளியோருக்கு மருத்துவ சேவை செய்வேன் என்று `நீட்' தேர்வில் பழங்குடியினருக்கான பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சந்திரன் தெரிவித்தார்.
பழங்குடியினர் பிரிவில்...
`நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேர தகுதியான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தர வரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.
இதில் பழங்குடியின மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி பூதக்கால் கிராமத்தை சேர்ந்த மாணவர் சந்திரன் முதலிடம் பிடித்துள்ளார். பழங்குடியின மாணவர்களில் இவர் ஒருவர் மட்டுமே தமிழகத்தில் `நீட்' தேர்வு எழுதி உள்ளார்.
விவசாய கூலி
மாணவர் சந்திரனின் பெற்றோர் பெயர் ராஜகோபால்- சின்னக்காள். இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். மாணவர் சந்திரன் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
`நீட்' தேர்வில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சந்திரன் கூறியதாவது:-
எனது பெற்றோர் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். அன்றாட உணவுக்கே எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் நானும் கூலி வேலைக்கு சென்று வருவேன். வறுமை காரணமாக உண்டு உறைவிடப் பள்ளியில் படித்தேன். எங்கள் கிராமம் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் அதிக நேரம் படிப்பேன்.
டாக்டராக ஆசைப்பட்டு `நீட்' தேர்வுக்காக கடும் முயற்சி எடுத்து படித்தேன். தினமும் இரவு 11 மணி வரை படிப்பேன். பின்னர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து மீண்டு்ம் படிப்பேன். எனது பள்ளி ஆசிரியர்களின் உதவியால் துறையூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து 4 மாதம் `நீட்' தேர்வுக்காக பயின்றேன். தற்போது நான் மாநில அளவில் பழங்குடியினருக்கான பிரிவில் முதலிடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள் சுரேஷ், பெருமாள், மனோகர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இருதய நோய்கள்
மருத்துவத்தில் இருதய நோய்கள் சம்பந்தமான படிப்பில் சேர்ந்து படிக்க உள்ளேன். ஏழை, எளியோருக்கு மருத்துவ சேவை செய்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே எனது விருப்பம். இதனை நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.