அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்து பணியை சிறப்பாக செய்வேன் -உதயநிதி ஸ்டாலின் அறிக்கை


அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்து பணியை சிறப்பாக செய்வேன் -உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
x

அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்து பணியை சிறப்பாக செய்வேன் என்றும், விமர்சனங்களை செயலால் எதிர்கொள்வேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் வெளியிட்ட முதல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் அரசியல் திசை வழியை தொடங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சருக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தை காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் விழுதாக, தி.மு.க. எனும் மாபெரும் இயக்கம் தமிழ்நிலத்தில் வேரோடி மக்கள் வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் என கட்சி முன்னோடிகள் வரிசையில், களம் பல கண்ட போராளியான தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இணைகிறேன்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஜூலை 4-ம் நாள் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக தி.மு.க. தலைவர் என்னை நியமித்தார். தி.மு.க. தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணி படையணியாக இளைஞர் அணியை தி.மு.க. தலைவர் உருவாக்கி வைத்திருந்தார். அதற்கு, என்னை நியமித்தபோதும், இப்போது நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன். 'நம்மை நம்பி தலைவர் வழங்கிய பொறுப்பு. அதற்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்' என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்க தொடங்கினோம்.

களப்பணி

தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரை கொண்டு பல்வேறு மக்கள் பணிகளை செய்ய தொடங்கினோம். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளை தூர்வாரினோம். நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில், மத்திய அரசும், அப்போதைய மாநில அரசும் செயலற்று நின்ற நேரத்தில், கட்சியின் இளைஞர் அணி சார்பில் களப்பணிகளை செய்தோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஊரடங்கு நாட்களில், மருந்து, உணவுப்பொருட்களை இல்லந்தேடி சென்று வழங்கினோம்.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக பிரிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தி திணிப்பு எதிர்ப்பு என கட்சி போராட்டங்களில் இளைஞர்-மாணவர்களை முன்னின்று வழி நடத்தி இருக்கிறோம். இளைஞர் அணியில் தொகுதிக்கு தலா 10 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்தோம். அவர்களில் இருந்து தகுதியின் அடிப்படையில் 3.5 லட்சம் பேரை ஒன்றிய கிளைகளிலும் பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் நிர்வாகிகளாக நியமித்தோம். அவர்கள் சட்டமன்ற தேர்தலில் உற்சாகத்துடன் ஆற்றிய பணி, கட்சிக்கு மேலும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்திருந்தது.

செயலால் எதிர்கொள்வேன்

இளைஞர் அணி பொறுப்புடன், கூடுதலாக சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினையும் கட்சி தலைவர் அளித்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முன்மாதிரி தொகுதியாக்க என்னாலான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். பொதுமக்கள் - அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செல்ல அதிக பொறுமை தேவை. அந்த வகையில், தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடமையை உணர்த்தியுள்ளது.

இப்படியான நிலையில்தான், கட்சி தலைவர், முதல்-அமைச்சர் தனது அமைச்சரவையில் எனக்கு இடமளித்து, கடமையாற்ற பணித்துள்ளார். இந்த பொறுப்பையும் சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சன கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story