பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
கொழுவாரி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சரால், வானூர் ஊராட்சி ஒன்றியம் கொழுவாரி ஊராட்சியில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறந்து வைக்கப்பட்டது. இதில் அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சமத்துவபுரத்தில் நேற்று மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர் சைலேஷ்குமார் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஷ் அகமது ஆகியோர் மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் குறித்து அவர்கள் கேட்டறிந்ததுடன், சமத்துவபுரத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.
நாற்றாங்கால் பண்ணை
இதை தொடர்ந்து ஓங்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்டு அப்பண்ணையில் கொய்யா, மாங்கன்று, நெல்லிக்கனி, தேக்குமரம், வாழைக்கன்று போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்வதோடு, அரசுக்கு சொந்தமான இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.
பின்னர் அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன், பணியாளர்கள் வருகைப்பதிவேடு மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர்கள் குமார், சுமதி, ராஜஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.