ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன் திடீர் மரணம்


ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன் திடீர் மரணம்
x

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

சென்னை,

சமீபத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்த கதிரவனும் ஒருவராவார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். சில நாட்கள் விடுமுறையில் இருந்த அவர் நேற்று காலையில் புதிய அலுவலகத்திற்கு வந்து பதவி ஏற்க இருந்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் கதிரவன் வசித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லை. புதிய அலுவலகத்திற்கு செல்வதற்காக நேற்று அவர் கார் டிரைவரை அழைத்திருந்தார். காரில் காத்திருந்த டிரைவர், காலதாமதமானதால் கதிரவனை செல்போனில் அழைத்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனவே டிரைவர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு கதிரவன் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டார்.

சொந்த ஊரில்...

உடனே அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு டிரைவர் அழைத்துச்சென்றார். அங்கு கதிரவன் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல், இறுதிச்சடங்குகளுக்காக சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த காந்திபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.

அரசு வேதனை

இதுகுறித்து பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன் மரணமடைந்தார் என்பதை மிகுந்த வேதனையுடன் அரசு தெரிவிக்கிறது. 3.6.1970 அன்று பிறந்த அவர் மாரடைப்பு காரணமாக 17-ந்தேதி (நேற்று) காலை 10 மணிக்கு காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் உயிர் பிரிந்தது. இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் காந்திபுரத்தில் நடக்கிறது.

முன்னாள் மாவட்ட கலெக்டர்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வேளாண்மை அதிகாரியாக 12.9.1996-ம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்தார். தர்மபுரி மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராக 2002-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு அரசுப்பணியில் பணியாற்றியுள்ளார். கதிரவன் 27.12.2013 அன்று ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை பெற்றார்.

அதன் பின்னர் சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளர், மதுரை மாநகராட்சி கமிஷனர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆகிய பதவிகளையும் கதிரவன் வகித்துள்ளார். அவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story