சிறுவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த ஐ.டி. பெண் ஊழியர்


சிறுவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த ஐ.டி. பெண் ஊழியர்
x

வேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த ஐ.டி. பெண் ஊழியருக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு தெரிவித்தார்.

வேலூர்

சிறுவன் படுகாயம்

வேலூரை அடுத்த வசூர் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில், 7 வயது சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அந்த சமயத்தில் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் கீதா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் வாணியம்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னைக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை கண்டதும் கீதா காரில் இருந்து இறங்கி உடனடியாக சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கிடையே அந்த வழியாக வந்த வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோரும் விபத்தை கண்டு காரை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டி.ஐ.ஜி. பாராட்டு

அப்போது சிறுவனுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு தனது காரில் ரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தார். மேலும் காரில் கீதாவுடன் உடன் சென்று சிறுவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த கீதாவை குட்சமாரியன் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

இதுபோன்று விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் காலதாமதம் இன்றி மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ப்பதன் மூலம் விலைமதிப்பிலாத மனித உயிரை காப்பாற்றலாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. தெரிவித்தார்.


Next Story