இருக்கன்துறை குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்


இருக்கன்துறை குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்
x

இருக்கன்துறை குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பாளையங்கோட்டை ஜவகர் திடல் அருகில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சுகன்யா, வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

ராதாபுரம் கால்வாய்க்கு 6 மாதம் தண்ணீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருக்கன்துறை குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. ஏனென்றால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்தால் அந்த பகுதியில் உள்ள கல்குவாரி செயல்பட முடியாது என்பதால் அதிகாரிகள் இருக்கன்துறை குளத்திற்கும், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் விடவில்லை. எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடவில்லை என்றால் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறி சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மானூர் குளம் விவசாய சங்கத்தில் பணம் கையாடல் நடந்துள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். மானூர் குளத்திற்கு டிராக்டர், பொக்லைன் எந்திரங்கள் வாங்கி குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது அதற்கு சரியாக கணக்கு காட்டப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமையன்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. இதுவரை வனத்துறை அதிகாரிகள் எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், ''இருக்கன்துறை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மானூர் குளம் விவசாய சங்க முறைகேடு குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்'' என்றார்.

விவசாயிகளின் இருக்கைகளுக்கே சென்று கலெக்டர் மனுக்களை பெற்று கொண்டார். மானூர் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விடுதலைக்களம் தலைவர் ராஜ்குமார், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் விவசாயிகள் மனு வழங்கினர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், தலைவர்களின் படங்களுடன் வேப்ப மரக்கன்றையும் எடுத்து வந்தார்.


Next Story