சாலையோர, தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
மயிலாடுதுறை நகர பகுதிகளில் உள்ள சாலையோர, தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை நகரசபை தலைவர் வழங்கினார்
மயிலாடுதுறை நகர பகுதிகளில் சாலையோர மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களை நகராட்சி சார்பில் கணக்கெடுக்கும் பணி நடந்தது. முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 463 பேருக்கு தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் நந்தகுமார், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நேதாஜிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர சபை தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வருங்காலங்களில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கடன் உள்ளிட்ட அரசின் சேவைகளை பெற முடியும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர சபை உறுப்பினர்கள் சம்பத், கார்த்தி, முன்னாள் நகர சபை உறுப்பினர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.