4 உலோக சாமி சிலைகள்-தஞ்சை ஓவியம் பறிமுதல்
கும்பகோணம் மவுனசாமிகள் மடத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 4 உலோக சாமி சிலைகள் மற்றும் 63 நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம் மவுனசாமிகள் மடத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 4 உலோக சாமி சிலைகள் மற்றும் 63 நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மவுனசாமிகள் மடம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மவுனசாமிகள் மடத்தில் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலச்சந்தர், ராஜகோபால் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் அந்த மடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
உலோக சாமி சிலைகள்-தஞ்சை ஓவியம் பறிமுதல்
அப்போது அங்கு பழமையான உலோக சிலைகள் இருந்தது தெரியவந்தது. அந்த சிலைகளை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அந்த உலோக சிலைகள் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த 23 செ.மீ உயரமும், 12.5 செ.மீ அகலமும் கொண்ட நடராஜர் சிலை, 14 செ.மீ உயரமும், 5 செ.மீ அகலமும் உடைய திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய சிவகாமி அம்மன் உலோகச்சிலை, 11 செ.மீ உயரமும், 8.5 செ.மீ அகலமும் கொண்ட திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய விநாயகர் சிலை, 37 செ.மீ உயரமும், 16 செ.மீ அகலமும் கொண்ட பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட உலோக சாமி சிலைகள் மற்றும் 144 செ.மீ உயரமும், 115 செ.மீ அகலமும் கொண்ட 63 நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நிர்வாகியிடம் விசாரணை
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் ஓவியத்தை கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த உலோக சிலைகளின் விபரங்கள் குறித்து மவுன சாமிகள் மடத்தின் நிர்வாகி வைத்தியநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் வழி, வழியாக இருந்து வரும் சிலைகள் மற்றும் ஓவியத்தை பாதுகாக்கும் பணியில் தான் ஈடுபட்டு வருவதாகவும் வைத்தியநாதன் தெரிவித்தார்.
கோவிலுக்கு சொந்தமானதா?
தொடர்ந்து மவுன சாமிகள் மடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியம் ஆகியவை தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதா? என்ற விவரங்கள் புலன் விசாரணையின்போதுதான் தெரியவரும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.