சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டசாமி சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்- எச்.ராஜா
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
தேவார பதிக செப்பேடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் 22 ஐம்பொன் சிலைகள், 462 தேவார பதிகங்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் நிலத்துக்கு அடியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் மற்றும் செப்பேடுகளை பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவில் வளாகத்தில்...
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை கோவிலில் வைத்து பாதுகாக்க வேண்டும் என சீர்காழி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதால், அந்த சிலைகளை இங்குள்ள கோவில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்கலாம்.
அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்துவது அவசியம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகள் அவ்வப்போது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
கூட்டணியில் அ.தி.மு.க.
எனவே ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் இங்கேயே வைத்து பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. உடனான கூட்டணி என்பது தொடர்கிறது. மற்ற மாநில தேர்தல்களில் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல்தான் தற்போதைய கர்நாடக மாநில தேர்தலிலும் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் சிவசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.