டி.என்.பாளையம், தாளவாடி பகுதியில்ஊருக்குள் புகுந்து சிறுத்தை-புலி அட்டகாசம்
சிறுத்தை-புலி அட்டகாசம்
டி.என்.பாளையம், தாளவாடி பகுதியில் சிறுத்தை, புலி ஊருக்குள் புகுந்து நாய், மாட்டை கடித்துக்கொன்றன.
மாடு இறந்து கிடந்தது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி அருகே உள்ள இக்களூர் பகுதியை சேர்ந்தவர் காளய்யா (வயது40). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை வழக்கம்போல் நேற்று காலை அருகே உள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் மதியம் மாட்டை பிடிக்க சென்றார். அப்போது அந்த பசுமாட்டை காணவில்லை. இதனால் மாட்டை காளய்யா தேடிப்பார்த்த போது சிறிது தூரத்தில் அவரது மாடு ஏதோ விலங்கு கடித்து குதறப்பட்ட ரத்த காயத்துடன் கிடந்தது.
புலி கொன்றது
இதனால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். அதன் அருகே பதிவான விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். அதில் பதிவானது புலியின் கால்தடம் என்பது தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி அங்கு சென்று மேய்ந்து கொண்டிருந்த மாட்டை கடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
நாய்
இதேபோல் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள நைனப்பன் கரடு என்ற இடத்தை சேர்ந்த சுப்புரான் தனது ஆடுகளுக்கு பாதுகாப்பாக அவரது நாயை அருகே உள்ள வேப்பமரத்தில் சங்கிலியால் கட்டியிருந்தார். இந்த நிலையில் இரவு 1.30 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுப்புரான் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவர் வளர்த்து வந்த நாயின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சிறுத்தை கடித்து குதறி கொண்டிருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே, சிறுத்தை அங்கிருந்து ஓடி சென்றுவிட்டது. அதன்பின்னர் அவர் நாயை பார்த்தபோது அது இறந்தது தெரியவந்தது.