கேரள கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை
ுமரி மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடும் நடவடிக்கை
நெல்லை மண்டல போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அண்டை மாநிலங்களில் இருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கழிவுகளை யாரேனும் வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டினாலோ அல்லது ஏஜென்டுகள் மூலம் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குழி தோண்டி புதைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர்கள் மீதும் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், காய்கறிகளை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது வாகனத்தின் உரிமையாளர்களுக்கே சில சமயங்களில் தகவல் தெரிவிக்காமல் கழிவுகளை குமரி மாவட்ட சரகத்திற்குள் கொண்டு வருவதாக தெரியவருகிறது.
வாட்ஸ்அப் எண்
இவ்வாறு கழிவுகளை யாரேனும் மாவட்டத்திற்குள் கொண்டு வருவது தெரியவந்தாலோ அல்லது கழிவுகளை கொட்டினாலோ குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04652-220167 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம். அல்லது 7010363173 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.