மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டு தீர்க்கவில்லை என்றால் சட்டப்பணிகள் குழுவை அணுகலாம்
கிராம சபை கூட்டங்களில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டு தீர்க்கவில்லை என்றால் சட்டப்பணிகள் குழுவை அணுகலாம் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மூத்த அலுவலர் வெள்ளைச்சாமி வரவேற்று பேசினார். அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மகாலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவல்லி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியுமான லதா, ஜெயங்கொண்டம் நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகரன், ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், மூத்த வக்கீல்கள் ஜெயராமன், சுரேஷ்குமார், சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு குறித்தும், பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் குறித்தும் விலக்கிப்பேசினர்.
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்
தலைமையேற்று பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேசும்போது கூறியதாவது:- கிராம ஊராட்சிகளின் தேவைகளை கிராம மக்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள விரும்புவது இல்லை. கிராமங்களில் உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது தேவைகளை பேசி தீர்த்துக் கொள்வதற்கு தான் அப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கிராம மக்கள் ஒருவேளை கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுகிறார்களே தவிர பொது பிரச்சினைகளை பேசுவதில்லை. ஒருவேளை கிராம சபை கூட்டங்களில் மக்களின் பொது பிரச்சினைகள் பேசப்பட்டு அதற்கு தீர்வுகாணப்படவில்லை என்றால் இதுபோன்ற சட்டப் பணிகள் குழு போன்ற அமைப்புகளை அணுகி உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
மக்கள் சட்டப்பூர்வமாக தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு கோர்ட்டுக்கு அலைவதற்கு பயந்து பிரச்சினைகளுடன் வாழப்பழகி கொள்கின்றனர்.
அப்படி இல்லாமல் சட்டப் பணிகள் குழுவை அணுகி தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும். சட்டப் பணிகள் குழுவை அணுகி வாய்மொழியாக உங்களது பிரச்சினைகளை சொன்னாலே போதும் அங்கிருக்கும் அலுவலர்கள் உங்களுடைய பிரச்சினைகளை பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சாமி தரிசனம்
அரியலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்து நடத்தினர். முடிவில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் உள்ள மறைந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கோவில் அர்ச்சகர் தோத்தாதிரி கோவிலின் பெருமைகளை கூறி பூஜைகளை செய்து பிரசாதங்கள் வழங்கினார்.