மாணவர்கள் விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்: கலெக்டர் செந்தில்ராஜ்
மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
கல்லூரி கனவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான 'நான் முதல்வன்-கல்லூரி கனவு' நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தமிழ்நாட்டின் உயர்கல்வி விகிதத்தை 51 சதவீதத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்தவே தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம் என குழப்பம் இருக்கும். இன்று உள்ள வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்புகள் 2040-ல் மாறி இருக்கும். எனவே மாணவர்கள் புதுப்புது படிப்புகளை படிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாது, நாளிதழ்களையும் தினமும் படிக்க வேண்டும். மனதில் பெரிய லட்சியங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு ஆலோசனை
அரசு பள்ளிகளில் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு, மாணவர்கள் பிளஸ்-2 முடித்த நிலையில் அவர்களுடைய மனதில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்குகிறது. மாணவர்கள் அந்த குழுவை தொடர்பு கொண்டு என்ன படிக்கலாம், எப்படி படிக்கலாம், கல்வி உதவி தொகை விவரம், இட ஒதுக்கீடு முறை, கல்லூரி விண்ணப்ப படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது மற்றும் சமூக, குடும்ப சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி மாணவர்கள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். பிறக்கும் போது அனைவரும் அறிவாளிகளாக பிறக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், எந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ, அதில் சேர்ந்து சிறப்பாக படிக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடித்து அரசியல்வாதியாகவோ, தொழில்முனைவோராகவோ, வெளிநாட்டிலோ வேலை செய்யலாம். பட்டப்படிப்புடன் சேர்த்து ஆங்கில பேச்சாற்றல் உள்ளிட்ட இதர திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.
தன்னம்பிக்கை
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசும் போது, மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கு ஒரு டிகிரி இருந்தால் போதும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். நிறைய பேர் அரசு பள்ளியில் படித்து முன்னேறியிருக்கிறார்கள். உங்களது எண்ணங்களுக்கு எது உகந்ததோ அதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
நமது முன்னேற்றத்துக்கு தடை பொருளாதார காரணிகளோ, பெற்றோரோ, உறவினர்களோ கிடையாது. ஒவ்வொருவராலும் முன்னேற முடியும். உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, ரெயில்வே உள்ளிட்ட நிறைய போட்டித் தேர்வுகள் உள்ளன. அளவில்லாத படிப்பும், சேவையும் தான் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும். மேலும் வாழ்க்கையில் மற்றவர்களை புண்படுத்தக்கூடாது. ஒவ்வொருவரும் நான் முதல்வனாக இருக்க வேண்டும் என எண்ண வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கு.சிவகுமார், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் தேரடிமணி, அண்ணா பல்கலைக்கழக தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.