எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் - மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு


எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால்  அ.தி.மு.க. தொண்டர்கள்  மனித வெடிகுண்டாக மாறுவார்கள் - மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு
x

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால், அ.தி.மு.க. தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.

மதுரை


எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால், அ.தி.மு.க. தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.

போராட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 11-ந் தேதி சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர், விமானத்தில் இருந்து கீழே இறங்கி அங்குள்ள பஸ் மூலம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, உடன் பஸ்சில் வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, அதனை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக இணையதளத்தில் பதிவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், அந்த செல்போனை தட்டி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், எடப்பாடி பழனிசாமி உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை கண்டித்து மதுரை மாநகர், மதுரை கிழக்கு புறநகர் மற்றும் மதுரை மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று பழங்காநத்தத்தில் போராட்டம் நடந்தது. அதில் மாவட்ட செயலாளர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பெரும்பாலான அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

ஸ்டாலின் பகல் கனவு

இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது என்று மக்கள் புரிந்து கொண்டனர். மு.க.ஸ்டாலினை விட சிறந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் குரல் கொடுக்க தொடங்கி விட்டனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி எப்போது என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். அதனை சகித்து கொள்ள முடியாத தி.மு.க. அரசு அ.தி.மு.க. மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஒருவர் அவதூறு பேசுகிறார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்த அரசு எடப்பாடி பழனிசாமி மீதே வழக்குப்பதிவு செய்கிறது. ஆட்சி இருந்தால், எதையும் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்து கொண்டு இருக்கிறார். நாங்கள் ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள். அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க.வை அழித்து விடலாம், எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் அது பகல் கனவாக தான் போகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மனித வெடிகுண்டு

ஆர்.பி.உதயகுமார் பேசும் போது பேசியதாவது:-

கண்ணகி நீதி கேட்ட மதுரையில், இன்றைக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் நடக்கிறது. வெந்த புண்ணில், வேல் பாய்ச்சுவது போல, கருணையே இல்லாத, சட்ட ஒழுங்கு தெரியாத அரசாக தி.மு.க. உள்ளது. விமான நிலையத்தில், உள்நோக்கத்துடன் ஒருவர் நாகரிகமற்ற முறையில், எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசி உள்ளார். அவருடன் வந்த பாதுகாவலர், அந்த நபரை விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரை கிடப்பில் போட்டு, எடப்பாடி பழனிசாமி மீது பொய்யான வழக்கை பதிவு செய்து உள்ளனர். இந்த மதுரை மண்ணிலிருந்து எச்சரிக்கையாக சொல்கிறோம், இந்த சர்வாதிகாரம் நீடிக்குமானால், அ.தி.மு.க. தொண்டர்கள், மனித வெடிகுண்டாக மாறி, அ.தி.மு.க.விற்கு பாதுகாப்பாக மாறுவார்கள். இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில், காவல்துறை ஏவல் துறையாக மாறி, கண்ணியத்தை இழந்துவிட்டது.

அரசியல் அனாதைகள்

அ.தி.மு.க.வை பிரித்து விடலாம். சிதைத்து விடலாம் என்று எண்ணி சிலர் தி.மு.க.வோடு கூட்டணி வைத்து செயல்பட்டனர். தற்போது அவர்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். தமிழகம் எங்கும் எடப்பாடி பழனிசாமி அலை தான் வீசுகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை காண மக்கள் அலைமோதுகின்றனர். அதனையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்யான வழக்குகளை பதிவு செய்கிறனர். எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story