தாய்மொழிக்கு குந்தகம் ஏற்படுகிறது என்றால் ஆண்களை விட பெண்கள் தான் சீறி எழ வேண்டும்


தாய்மொழிக்கு குந்தகம் ஏற்படுகிறது என்றால் ஆண்களை விட பெண்கள் தான் சீறி எழ வேண்டும்
x

தாய்மொழிக்கு குந்தகம் ஏற்படுகிறது என்றால் ஆண்களை விட பெண்கள் தான் சீறி எழ வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை


தாய்மொழிக்கு குந்தகம் ஏற்படுகிறது என்றால் ஆண்களை விட பெண்கள் தான் சீறி எழ வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்படும் அனைத்து வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் பெருங்கடன் வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குனர் சையது சுலைமான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 320 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.320 கோடியே 86 லட்சம் வங்கி கடன் இணைப்பும், 204 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.101 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முன்னதாக அவர் பேசியதாவது:-

பெண்களுக்கு முக்கியத்துவம்

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெண்களுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படுகிறது.

1989-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று சொன்னால் அது பெண்கள் கையில் தான் உள்ளது.

பெண்கள் மனது வைத்தால் தான் குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். இந்தியாவிலேயே இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்ததும், தமிழகத்தில் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்ததும் தலைவர் கலைஞர் தான்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான்.

இந்த ஆட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுகிறது. பெரியார் பெண்களை படிக்க சொன்னார்.

பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 8-ம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் என்று திட்டத்தை செயல்படுத்தினார்.

ஆனால் இந்த திட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்கள் பயன்பெற ஆண்டு கணக்கில் காத்திருந்தனர். அந்த வகையில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் போது தமிழகத்தில் 3 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறாமல் நிலுவையில் இருந்தனர்.

தாய் மொழிக்கு குந்தகம்

தற்போது பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தியன் வங்கி அதிக அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கி உள்ளது.

அதைபோல் மற்ற வங்கிகளும் கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசின் சார்பில் எந்த வகையில் உதவி செய்ய வேண்டுமோ அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

மேலும் தமிழ் மொழிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் இயக்க நண்பர்களும், அரசு அலுவலர்களும் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தாய் மொழிக்கு குந்தகம் ஏற்படுகிறது என்று சொன்னால் ஆண்களை விட பெண்கள் தான் சீறி எழ வேண்டும்.

ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்று மொழியை சொல்லிக் கொடுப்பதும் தாய் தான். தமிழகத்தில் சீரிய ஆட்சியை நடத்தி வரும் முதல்-அமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்ற தாய்மார்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைவாணி கலைமணி, தமயந்தி ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரைவெங்கட், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், வேங்கிகால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி திட்ட அலுவலர் வில்லியம்ஸ்சகாயம் நன்றி கூறினார்.


Next Story