பனை மரங்கள் வெட்டப்பட்டால் வருவாய்த்துறையினரே பொறுப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்பட்டால் வருவாய்த்துறையினரே பொறுப்பு என கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை மரங்கள் நிறைந்த பசுமை மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதி ஏதுமின்றி சமூக விரோதிகளால் மரங்கள் வெட்டப்படுவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்படுவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவ்வாறு பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்படுமாயின் அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரையே சாரும். புகார்கள் ஏதாவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமானால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை 04179- 222111 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.