கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது


கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது
x

‘‘தமிழகத்தில் பா.ஜ.க. என்றுமே வளர முடியாது. அந்த கட்சிக்கு கொள்கைகளே கிடையாது’’ என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. எதிர்க்கட்சி என்ற நிலையை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கொள்கைகள் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது மத்திய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதேபோலதான் காவிரி நதிநீர் பிரச்சினையிலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை. முல்லை பெரியாறு பிரச்சினையிலும் இதே போக்கைத்தான் மத்திய அரசு கடைபிடிக்கிறது.

மாநில உரிமையை பறிக்கக்கூடாது

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஈழத்தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தினர் கற்பழித்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்து இலங்கை அரசுடன் மத்திய அரசு இப்போது கொஞ்சி குலாவி வருகிறது. மத்திய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இருந்து வந்த சுயாட்சி அதிகாரம், படிப்படியாக பறிக்கப்பட்டு, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மாநில அரசுகளை பொம்மைகளாக, பஞ்சாயத்துகளாக நடத்தும் போக்கில் பா.ஜ.க. அரசு ஈடுபடுகிறது. மாநிலத்தின் ரூ.1.5 லட்சம் கோடி விற்பனை வரியை பறித்தார்கள். ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்தனர். பீகார், உத்தரபிரதேசத்தை பின்தங்கிய மாநிலங்களாக மாற்றி, நமது பணத்தையெல்லாம் அங்கே கொடுத்து, சோம்பேறிகளை மேலும் சோம்பேறிகளாக மத்திய அரசு ஆக்குகிறது.

தமிழகத்தில் 40 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் நிலையில், நமது பணத்தை அங்கே வழங்கும் போக்கை கண்டிக்கிறோம். மாநில உரிமையை பறிக்கக்கூடாது.

பா.ஜ.க. வளர முடியாது

பா.ஜ.க.வுடன் தேர்தல் உடன்பாடு என்பதற்காக எங்கள் உயர் கொள்கைகளை விட்டுவிட முடியுமா?. உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் தப்புக்கணக்கு போட்டு தனித்து நின்றனர். தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யாமல் 'எங்களுக்கு ஓட்டு போடுங்கள், ஆட்சியை பிடிக்க வேண்டும், அடுத்த பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்று சொன்னால் மக்கள் ஏற்பார்களா?.

பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அவர்களை கண்டிக்க எங்களுக்கு உரிமையில்லை. ஆனால் மக்களுக்கு தெரியும், தங்கள் எண்ணங்களை ஈடேற்றுபவர்கள் யார் என்று... அந்த உண்மை நிலைக்கேற்ப தங்கள் கொள்கைகளை, செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் பா.ஜ.க. வளரவே முடியாது. பா.ஜ.க. புதிதாக எதையும் உருவாக்கிவிடவில்லை. அவர்களிடம் மக்கள் இல்லை. மக்களுக்கான கொள்கைகளும் இல்லை. எனவே அவர்களுக்கு வளர்ச்சி இல்லை. இதைப்பற்றி நாங்கள் அனுதாபப்பட வேண்டியதும் இல்லை. தி.மு.க.வின் குறைபாடுகள் தொடருகிற வரை, பா.ஜ.க. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களை ஈர்க்க முயற்சி செய்யலாம்.

ஜெயலலிதா சாவுக்கு சசிகலா காரணமா?

சசிகலா, டி.டி.வி.தினகரனிடம் தொண்டர்களும் இல்லை, மக்களும் இல்லை. அ.தி.மு.க.வில் அவர்களுக்கு உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்திய பிறகு, தமிழகத்தில் இன்றைக்கு அவர்கள் செல்லாக்காசாகி போயிருக்கிறார்கள். ஜெயலலிதா சாவுக்கு சசிகலாதான் காரணம் என்று மக்கள் மத்தியில் பரவியுள்ளது. உண்மை என்னவென்பதை விசாரணை ஆணையமே சொல்லவேண்டும்.

இந்த நிலையில் சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்தால் அ.தி.மு.க.வுக்கு பெருமை கிடைக்குமா? சிறுமை கிடைக்குமா? செல்வாக்கு - வாக்கு வங்கி உயருமா, சரியுமா? நிச்சயம் சரியத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story