மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்


மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்
x

நெல்லை மாநகரப்பகுதியில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் அந்த வீடு, கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருநெல்வேலி

நெல்லை மாநகரப்பகுதியில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் அந்த வீடு, கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர்

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் நடைபெறும் போது சில வீடுகள் மற்றும் கடைகளில் அதிக அளவில் குடிநீர் எடுப்பதற்காக குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி அதன் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மற்ற வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்பு உள்ள பகுதிகளில் குடிதண்ணீர் வரந்து குறைந்தது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், மாநகராட்சி பகுதியில் மோட்டார் வைத்து குடிதண்ணீர் உறிஞ்சுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

140 மோட்டார்கள் பறிமுதல்

அந்த கண்காணிப்பு குழுவினர் தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிதம்பரநகர், நல்மேய்ப்பர்நகர், செல்வ விக்னேஷ்நகர் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி 73 மின்மோட்டார்களையும், பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட போத்தீஸ் நகர், ஐஸ்வர்யா நகர், கே.டி.சி.நகர், அய்யா சுப்பிரமணிநகர், கோஆப்டெக்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் 67 மின்மோட்டார்களையும் ஆக மொத்தம் 140 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 140 மின்மோட்டார்களையும் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார்.

இணைப்பு துண்டிக்கப்படும்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் 5 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் தொகையும், 1 லட்சத்து 82 ஆயிரம் குடியிருப்புகளும் உள்ளன. அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மாநகராட்சி சார்பாக நடைபெற்று வருகிறது. மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் குழாய் இணைப்புகளில் நீர்க்கசிவு உருவாகிறது. மேலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் அவர்களாகவே முன்வந்து சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் வைத்திருப்பவர்கள் அதனை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சிறப்பு குழு கண்டறிந்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் இனிவரும் காலங்களில் குடிநீர் இணைப்புகள் நிரந்தரமாக துண்டிக்கப்படும். பிடிபட்ட மின்மோட்டார்கள் பொது ஏலத்தில் விடப்படும். சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story