பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருந்தால் குண்டர் சட்டம் பாயும்


பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருந்தால் குண்டர் சட்டம் பாயும்
x

பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வேறு நபர்களுக்கு ஆலையை குத்தகைக்கு விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ஆலைகளில் விதிமீறல் இருந்தால் குண்டர் சட்டம் பாயும் எனவும் கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரித்தார்.

விருதுநகர்


பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வேறு நபர்களுக்கு ஆலையை குத்தகைக்கு விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ஆலைகளில் விதிமீறல் இருந்தால் குண்டர் சட்டம் பாயும் எனவும் கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரித்தார்.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் மட்டுமே நடத்த வேண்டும். தங்களது ஆலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடக்கூடாது. ஆய்வின் போது குத்தகைக்கு விடப்பட்டது கண்டறியப்பட்டால் மேற்பட்ட ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமையாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு ஆய்வு குழுக்களை தவிர்த்து மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். அதிகப்படியான பணியாளர்களை பயன்படுத்துதல், அதிக அளவிலான வெடிப்பொருட்கள் இருப்பு வைத்தல், தயாரித்தல் மற்றும் உள்குத்தகை போன்ற கடுமையான விதிமீறல் கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சி

விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு சிவகாசி தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு முன்கூட்டியே அறிவிக்கப்படும். மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அனைவரும் விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story