போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால்சாலை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைஅமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை


போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால்சாலை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைஅமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
x

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் சாலை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோடு

சாலை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது எந்த தளங்களில் என்னென்ன சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளது? கட்டிடம் தரமாக கட்டப்பட்டு உள்ளதா? போன்றன குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

அதன்பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.67 கோடி செலவில் 350 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவுபெற உள்ள நிலையில் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தரமான பொருட்களை பயன்படுத்தி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்களுடன் புதிய கட்டிடம் உள்ளது. இதில் 4-வது தளத்தில் இதய சிகிச்சை பிரிவும், 7-வது தளத்தில் எலும்பு மற்றும் நரம்பியல் பிரிவும் செயல்பட உள்ளன. நிலுவையில் உள்ள சிறிய, சிறிய பணிகளும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, தூய்மைபடுத்தப்பட்ட பிறகு மருத்துவத்துறையிடம் கட்டிடம் ஒப்படைக்கப்படும்.

துறை ரீதியான நடவடிக்கை

ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் வந்து செல்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடவசதி இல்லை. எனவே ஆஸ்பத்திரி வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு முன்பு உள்ள பாலத்துக்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசின் விதிகளிலேயே இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 44 நெடுஞ்சாலைத்துறை கோட்டங்கள் உள்ளன. இதில் கோபி கோட்டத்தில் பணியாற்றி வரும் சில ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சங்கம் என்ற பெயரில் வைத்து கொண்டு சலுகைகளை வாங்கி கொடுப்பதாக சாலை பணியாளர்களை போராட்டதுக்கு தூண்டி விடுகிறார்கள். ஆனால் 75 சதவீத ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இருந்தாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கண்காணிப்பு பொறியாளரிடம் கூறிஉள்ளேன். பணிக்கு செல்லவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேம்பாலம்

பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதினேன். பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பாலம் அமைப்பது குறித்து அடுத்தமுறை டெல்லி செல்லும்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையக அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அரசு விதிமுறைப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தங்களது துறை தொடர்பான ஆய்வு கூட்டங்களுக்கு திருச்சி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டது. தற்போது 9 மாவட்டங்கள் கோவை மண்டலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் இளஞ்செழியன், கண்காணிப்பு பொறியாளர் சத்யவாகிஸ்வரன், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story