ஒயின் குடித்தால் கலராகலாம்...! போதையில் தடுமாறிய பள்ளி மாணவிகள்...!
எவன்டா சொன்னது...! ஒயின் குடித்தால் கலராகலாம்- தவறான வழிகாட்டலால் போதையில் தடுமாறிய பள்ளி மாணவிகள்
திருச்சி:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து பெட்டிக்கடை முதல் பெரிய கடை வரை விற்பனை ஜரூராக நடந்து வந்தது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதைபொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சமரசம் செய்தால் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி போதைபொருள் விற்பனையில் ஈடுபடுவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு அரங்குகள், பள்ளி வளாகங்களில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் கரூரில் சீருடை அணிந்த பள்ளி மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் சர்ச் கார்னர் அருகே மூன்று பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மதுபோதையில் தன்னிலை அறியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கடைக்காரர்கள், ஏதோ உடல்நலக்குறைவால் இப்படி ஆகியிருக்கலாம் என்று நினைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சை கண்டதும் ஒரு மாணவி சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து நழுவி சென்று விட்டார். மற்ற ரெண்டு மாணவிகளால் நகர முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தபோதுதான் மாணவிகள் போதையில் திளைத்திருப்பது தெரிந்தது. பொதுமக்கள் ரெண்டு பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போதை மயக்கத்தில் தடுமாறிய அந்த மூன்று மாணவிகளும் கரூர் மாநகரிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். மூன்று பேரும் இணை பிரியா தோழிகளாகவும் இருந்தனர். அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மறுதேர்வு எழுதுவதற்காக சீருடையில் வேறொரு பள்ளிக்கு வந்துள்ளனர்.
தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் வெளியில் வந்த அவர்கள் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஒயின் குடித்தால் மேலும் கலராக மாறலாம் என யாரோ சொன்ன தகவலை கேட்டு தெரிந்தவர்கள் மூலமாக டாஸ்மாக் கடையில் ஒயின் வாங்கி மூன்று பேரும் குடித்துள்ளனர்.
பின்னர் வழக்கம்போல் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் போதை தலைக்கேறி தடுமாறி இருக்கிறார்கள். தெரியாமல் குடித்து விட்டதாக அந்த மாணவிகள் போலீசாரிடம் அழுது புலம்பினர்.
போதையில் சுதாரித்துக்கொண்டு ஆம்புலன்சில் ஏறாமல் டிமிக்கி கொடுத்து சென்றவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களின் பெற்றோரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.