பாரம்பரிய தானியங்களைஉட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட காலம் வாழலாம்


பாரம்பரிய தானியங்களைஉட்கொண்டால்  நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட காலம் வாழலாம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய தானியங்களைஉட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட காலம் வாழலாம் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

பாரம்பரிய தானியங்களை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்டகாலம் வாழலாம் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

ஊட்டச்சத்து விழா

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து மாதவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, வளரும் பெண்களுக்கு எதிர்காலத்தில் நிறைய பிரச்சினைகள் வருகிறது. குழந்தைப்பேறு தவமிருந்து பெறக்கூடிய அளவுக்கு காலம் மாறிவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. உங்களது உணவுபழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். வாழைப்பழம், பொரிகடலை, கடலைமிட்டாய் ஆகியவற்றில் சத்துக்கள் உள்ளது. ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் மூலம் 1.16 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் 47 ஆயிரம் பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.

முன்மாதிரி

ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்கிட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களால் சிறந்த முறையில் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது. நாம் ஒவ்வொரு கால கட்டங்களில் விளைவிக்கப்படும் பாரம்பரிய தானிய வகைகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட காலம் வாழலாம். இதன் வாயிலாக நம்முடைய வரும் கால சந்ததியினரும் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள முன் மாதிரியாக இருக்கலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலர் சரசுவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, உதவி சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, பேராசிரியர் மாரிதங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story