தொழில் நுட்பத்தை கடைபிடித்தால் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்


தொழில் நுட்பத்தை கடைபிடித்தால் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்
x

50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை கடைபிடித்ததால் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை கடைபிடித்ததால் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

உளுந்து சாகுபடி

கோடைப்பருவத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் உளுந்து பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணமாகும். இதற்கு ஏற்ற ரகம் வம்பன் 8,10,11 ஆகியவையாகும். விதைப்பு செய்வதற்கு முன்பாக விதை மூலம் பரவக்கூடிய வேரழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூசானம் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பிறகு பயறு வகை பயிர்களுக்குரிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் உரத்தை 200 கிராம் அத்துடன் அசோஸ்பைரில்லம் 200 கிராம் என்ற உயிர் உரத்தை சேர்த்து 160 மில்லி ஆறிய அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 1 நாள் முழுவதும் நிழலில் உலர்த்தி பின்னர் உயிர் உர நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்கு பின் விதைப்பு செய்ய வேண்டும்.

செலவு குறைகிறது

இவ்வாறு விதைப்பு செய்யும்போது காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேமித்து வைத்துக் கொண்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுவதால் தழைச்சத்து இடுவதை குறைத்து கொள்ளலாம். இதனால் சாகுபடி செலவு குறைகிறது. தரிசு நிலத்தில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது.

அதேசமயம் நஞ்சை தரிசில் விதைப்பு செய்யும்போது 1 ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது. இதை அறுவடை செய்வதற்கு 8 லிருந்து 10 நாட்களுக்கு முன்பாக விதை நேர்த்தி செய்து விதைகளை தூவ வேண்டும். அப்போதுதான் அனைத்து விதைகளும் முளைக்கும் இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்கும்போது எக்டேருக்கு 630 கிலோ வரை மகசூல் பெறலாம்.

மானிய விலையில் உளுந்து விதை

பயறு வகை பயிர்களில் உற்பத்தியையும் சாகுபடி பரப்பையும் அதிகப்படுத்துவதற்காக தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதை வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பில் கூறியுள்ளார்.


Next Story