"தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள்" அவர் எங்கே போவார் என்றே தெரியாது" - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்....!
கட்சிக்காக இன்று வரை சுப்ரீம் கோர்ட்டு சென்று போராடிக்கொண்டிருக்கிறேன். இது தான் தர்ம யுத்தம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை,
சென்னை நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்று வருகிறது. நிர்வாகிகளிடம் கலந்து பேசி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். இந்த முடிவுகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்க உள்ளார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி.
எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா? அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது.
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம், ஒற்றுமையாக இருக்க கூடாது என பழனிசாமி சொல்கிறார். தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள். என்ன மணி அடித்தாலும் 'பப்பு' வேகாது. தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என எடப்பாடி சொல்லிப் பார்க்கட்டும், அவர் எங்கே போவார் என்றே தெரியாது.
இந்த ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் சக்தி தான் தொண்டர்கள். எங்கள் உயிரே போனாலும் தலைமையை தேர்வு செய்யும் தொண்டர்கள் உரிமையை போக விட மாட்டோம். காலையில் கண் விழிக்கும்போது அம்மாவின் புகைப்படத்தில்தான் கண் விழிக்கிறேன், இன்றும் கூட எனக்கு அந்த நன்றி இருக்கிறது. கட்சிக்காக இன்று வரை சுப்ரீம் கோர்ட்டு சென்று போராடிக்கொண்டிருக்கிறேன். இது தான் தர்ம யுத்தம்.
டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால் அன்றைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தேன்.
கடந்த அதிமுக ஆட்சியின் நான்கரை ஆண்டுகளும் நான் ஏமாற்றப்பட்டேன். துணை முதல்-அமைச்சர் பதவி டம்மி என்பதால் தான் அதனை வேண்டாம் என கூறினேன்.எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நாளை அதிமுகவின் தலைமை தாங்கக்கூடியவர் ஒரு தொண்டனாகதான் இருப்பார்.
சர்வாதிகாரத்தின் உச்சத்திலிருந்து கொண்டு கட்சியை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த பழனிசாமியை நாடு மன்னிக்காது. ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும் என்றார்.