விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் லாபம் கிடைக்கும்
விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் லாபம் கிடைக்கும் என்று பாரம்பரிய விதை ரகங்கள் கண்காட்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
கண்காட்சி
வேளாண்மை- உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) எம்.ஸ்டீபன்ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் சிறுதானிய ரகங்கள், நெல் ரகங்கள் போன்ற பல்வேறு விதை ரகங்கள், வேளாண் எந்திரங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-
லாபம் கிடைக்கும்
இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய உள்ளூர் ரக சிறுதானியங்கள் இடம் பெற்றுள்ளன. இதை விவசாயிகள் பார்ப்பதுடன் அதை பயிரிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய ரகங்களை முன்னெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் சிறுதானியங்களை பலர் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இன்றளவும் அந்த நிலை நீடிக்கிறது. எனவே விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் லாபம் கிடைக்கும். வேலூர் மாவட்டத்தில் பலர் நிலக்கடலை பயிரிடுகின்றனர். இந்த நிலக்கடலையை எந்தெந்த வழிகளில் உணவுப் பொருட்களாக பயன்படுத்த வேண்டும் என அறிந்திருக்க வேண்டும்.
மதிப்புகூட்டி...
விவசாயிகள் விவசாயப் பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் கால்நடைகளையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால் ஆண்டுதோறும் விவசாயத்தில் லாபம் கிடைக்காது. கால்நடைகள் வளர்த்து வந்தால் அதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலை, விளைவிக்கப்படும் பயிர் உள்ளிட்டவைகளை வைத்து வேளாண் மண்டலங்களை அரசு பிரித்துள்ளது. இந்த நடைமுறை எதற்கு என்றால் அந்தந்த பகுதியில் விளைவிக்கப்படும் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் தான்.
அங்காடிகளில் வெளிநாட்டு பொருட்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலை மாறி அங்காடிகளில் பாரம்பரிய உள்ளூர் சிறுதானியங்கள் மற்றும் உணவு வகைகள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்.
அந்த காலத்தில் முருங்கைக்காய் காய்ந்து விட்டால் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் தற்போது முருங்கைக்காயை பொடியாக்கி, இலையை காய வைத்து பொடியாக்கி மதிப்பு கூட்டி வெளிநாடுகளில் விற்பனை செய்கின்றனர். இதே போன்று ஒவ்வொரு பொருளையும் மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செந்தில்குமரன், தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கலைச்செல்வி , ஒன்றியக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.