பக்கத்தில் நின்றால் தெரியாது; தூரத்தில் நின்றால் தெரியும் -திருப்பரங்குன்றம் ராஜகோபுரத்தை மறைக்கும் ஒளிரும் பெயர் பலகை- பக்தர்கள் வேதனை


திருப்பரங்குன்றம் கோவிலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையானது ராஜகோபுரத்தை மறைப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம், நவ.9-

திருப்பரங்குன்றம் கோவிலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையானது ராஜகோபுரத்தை மறைப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம்

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்". ஆனால் கோவில் வாசலில் நின்று ராஜகோபுரத்தை பார்க்க முடியாத நிலையாக கோவிலின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட சுப்பிரமணிய சுவாமி கோவிலானது திருப்பரங்குன்றத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கம்பீரமாக 150 அடி உயரத்தில் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்து உள்ளது.

அதில் நியான் ஓம் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரங்களில் ஓம் விளக்கு ஒளிருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு கோவிலின் முன்மண்டபத்தின் மேல்புறமான சாளகரத்தில் முதல் படைவீடு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் என்ற எழுத்து வடிவமும், ஓம்முருகா என்று எழுத்தும் கொண்டு எல்.இ.டி.யில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானோர் கோவிலுக்குள் செல்லும்போதும், சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வரும் போதும் கோவில் வாசலில் நின்று தலைமேல் இரு கைகளை தூக்கி ராஜகோபுரத்தை நோக்கி வணங்குவார்கள்.

ஒளிரும் பெயர் பலகை

ஆனால் தற்போது கோவிலில் பெயர்பலகை வைக்கப்பட்டு இருப்பதால் கோவிலின் வாசலில் நின்று தரிசனம் செய்யும் போது ராஜகோபுரம் தெரியவில்லை. ஆகவே கோடி புண்ணியமான கோபுர தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகிறார்கள்.. கோவிலின் ராஜ கோபுரத்தின் வளாகத்தில் உயரமான இடத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி மிகுந்த பாதுகாப்புடன் ஒளிரும் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் சுரேஷ் கூறும்போது:- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என்று வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்காக கோவில் இருக்கும் இடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கோவில் ஸ்தானிக பட்டர்களின் கருத்து கேட்டு ஒளிரும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில் வாசலை விட்டு சற்று தூரத்தில் சன்னதி தெருவில் நின்று பார்த்தால் கோவிலின் ராஜகோபுரம் தெரியும் என்றார்.


Next Story