இளையரசனேந்தல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


இளையரசனேந்தல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x

இளையரசனேந்தல் கிராமத்தில் மாகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

இளையரசனேந்தல் கிராமத்தில் மாகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

இளையரசனேந்தல் கிராம மக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கராயலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டரிடம் கொடுத்தனர்.

ஆண்களுக்கு வேலை மறுப்பு

அந்த மனுவில், குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள இளையரசனேந்தல், கொடப் பாறை, அய்யம்பட்டி, லட்சுமியம்மாள் புரம் கிராமங்களைச் சேர்ந்த 1,286 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் இளையரசனேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதற்கு பணித்தள பொறுப்பாளர்களும், உடந்தையாக ஓவர்சியர், எழுத்தர் ஆகியோர் இருப்பதாகவும், இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு தினமும் கூலியாக ரூ.150 மட்டும் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளிடம் புகார்

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த மே மாதம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து புகாருக்கு உள்ளான பொறுப்பாளர்கள் ஆண்களுக்கு வேலை தர மறுத்து வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலைதர மறுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆண்களுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.

உதவி கலெக்டர் உறுதி

மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், சம்பந்த அலுவலர்களிடம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story