மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோர்
மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோர் நடந்தது. 25 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டங்களில் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது. முன்கூட்டியே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட மங்களமேடு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, பழைய அரசமங்கலம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணியின் மகன் மகாராஜன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராய ஊறல் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 18 லிட்டர் சாராயம், ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண் மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.