கோவில்பட்டியில்யூனியன் அலுவலகத்தை இலுப்பையூரணி கிராமபெண்கள் முற்றுகை
கோவில்பட்டியில்யூனியன் அலுவலகத்தை இலுப்பையூரணி கிராமபெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் சீராகவேலை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெண்கள் முற்றுகை
இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த மறவர்காலனி, சிந்தாமணி நகர், தாமஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலையில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு திரணடு வந்தனர். அந்த அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்களுக்கு பதிலாக, தங்களுக்கு 20 நாட்கள் தான் வேலை தரப்படுகிறது. இதனால் தாங்கள் வருமானம் இன்றி அவதிப்படுவதாகவும், இந்த திட்டத்தில் சீராக வலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
அதிகாரிகள் உறுதி
ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களிடம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் ராஜேஷ் குமார், ராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் சீராக வேலை கிடைப்பதற்கு, பஞ்சாயத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டம் நடத்திய பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் யூனியன் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.