கரு முட்டை தானம் தொடர்பாக அரசு வழிகாட்டி நெறி முறைகள் வகுக்க வேண்டும்- இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா பேட்டி


கரு முட்டை தானம் தொடர்பாக அரசு வழிகாட்டி நெறி முறைகள் வகுக்க வேண்டும்- இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா பேட்டி
x

கருமுட்டை தானம் தொடர்பாக வழிகாட்டி நெறி முறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு

கருமுட்டை தானம் தொடர்பாக வழிகாட்டி நெறி முறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கருத்து தெரிவித்து உள்ளார்.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை கருவூட்டலுக்காக 16 வயது சிறுமியின் கரு முட்டைகள் தானமாக பெறப்பட்டதாகவும், சட்டத்துக்கு புறம்பாக இந்த கருமுட்டை விற்பனை நடந்ததாகவும் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கர் மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கியவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பல கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பிலும் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முறையான விசாரணை

இந்தநிலையில் இதுபற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா நேற்று ஈரோட்டில் நிருபர் களிடம் பேசியபோது கூறியதாவது:-

கருமுட்டை தானம் தொடர்பான பிரச்சினை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையும், மருத்துவத்துறையில் நல்ல முறையான விசாரணை நடத்தி வருகிறது. எனவே முழுமையான விசாரணை முடியும் வரை இந்திய மருத்துவ சங்கம் எந்தவிதமான குறுக்கீடும் செய்வதாக இல்லை.

வழிகாட்டி நெறி முறைகள்

ஈரோட்டை பொறுத்தவரை போலீசாரின் விசாரணையாகட்டும், மருத்துவக்குழு விசாரணையாகட்டும் ஆஸ்பத்திரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து உள்ளது.

ஆதார் அட்டையை போலியாக வழங்கி கருமுட்டை விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆதார் அட்டையை ஆவணமாக கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். ஆதார் அட்டை, அரசால் வழங்கப்படுவது. எனவே அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யும் வசதி ஆஸ்பத்திரிகளிடத்தில் இல்லை. பெரும்பாலும் அதை யாரும் சரிபார்ப்பதும் இல்லை.

ஆனால், கருமுட்டைதானம் தொடர்பாக முறையான வழிகாட்டி நெறி முறைகளை வகுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு முறைகள் இருக்கின்றனவா, அது முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்ற முழுவிவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. எனவே வருங்காலத்தில் மக்களும், ஆஸ்பத்திரிகளும் பாதிக்கப்படாமல் இருக்க, சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் நடப்பதை தடுக்க முறையான வழிகாட்டு முறை தேவை.

கருமுட்டை வங்கி

மேலும், கருமுட்டை தானத்தை யார் செய்ய வேண்டும். எப்போது வழங்கவேண்டும். எப்படி வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் சரியாக வகுக்கப்பட வேண்டும்.

உடல் உறுப்புதானம், ரத்த தான வங்கிகள் இருப்பதுபோன்று அரசே முறையான வழிகாட்டுதல்களுடன் கருமுட்டைதான வங்கிகள் உருவாக்கினால் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும்.

மிரட்டல்கள்

இந்தநிலையில் புகாருக்கு உள்பட்ட மருத்துவமனைகளை மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக புகார்கள் வருகின்றன. பணம் பறிக்கும் நோக்கத்தில் பலரும் செயல்படுகிறார்கள். இது ஏற்கனவே பல ஆஸ்பத்திரிகளிலும் அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருக்கிறது. எனவே டாக்டர்கள் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

கருமுட்டை தானம் பிரச்சினை தமிழ்நாடு தாண்டி வேறு மாநிலங்களிலும் பரவி இருப்பதால் மத்திய அரசு சி.பி.ஐ. மூலம் விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் உண்மை தன்மை தெரியவரும்.

இவ்வாறு இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜாகூறினார்.


Next Story