பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் அறிவுறுத்தினார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து பல்வேறு குற்ற பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் குறித்தும், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
உடனடி நடவடிக்கை
தொடர்ந்து அவர் பேசுகையில் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுப்படுத்த வேண்டும், கண்டுபிடிக்க முடியாமல் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.